search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிவிரைவு ரெயில்களில் கேப்டன்கள் நியமனம்"

    நீண்ட தூரம் பயணம் செய்யும் எக்ஸ்பிரஸ் மற்றும் அதிவிரைவு ரெயில்களில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் புகார்கள், குறைகளை கேட்க கேப்டன்கள் என்ற புதிய பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். #Train #traincaptain

    சென்னை:

    நீண்ட தூரம் பயணம் செய்யும் எக்ஸ்பிரஸ் மற்றும் அதிவிரைவு ரெயில்களில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் புகார்கள், குறைகளை தீர்க்க தென்னக ரெயில்வே புதிய திட்டங்களை அமல் படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் அனைத்து எக்ஸ்பிரஸ் மற்றும் அதிவிரைவு ரெயில்களில் ‘கேப்டன்’கள் என்ற புதிய பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இப்பணியை டிக்கெட் பரிசோதகர்கள் மேற்கொள்ள உள்ளனர்.

    பயணத்தின் போது ஏற்படும் குறைகள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து ‘கேப்டன்’களை நேரடியாக தொடர்பு கொண்டு பயணிகள் புகார் செய்யலாம். புகார்களை ரெயில்வே அதிகாரிகளிடம் இவர்கள் எடுத்துக்கூறி நிவர்த்தி செய்வார்கள்.

    பெண் பயணிகள் தங்கள் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை ‘கேப்டன்’ கள் மட்டுமின்றி ரெயில்வே போலீஸ், ரெயில்வே பாதுகாப்பு படையினரிடம் தெரிவிக்கலாம் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


    கடந்த ஆண்டு சென்னை -மேட்டுப்பாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம்- சென்னை மெயில், திருவனந்தபுரம்- சென்னை எக்ஸ்பிரஸ் மற்றும் மங்களூரு சென்ட்ரல்- சென்னை சென்ட்ரல் மெயில் ஆகிய 4 ரெயில்களில் ‘கேப்டன்’கள் என்ற புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. இந்த திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அனைத்து எக்ஸ்பிரஸ் மற்றும் அதிவிரைவு ரெயில்களில் இது அமல்படுத்தப்பட உள்ளது.

    இத்திட்டம் அடுத்த ஆண்டு (2019) முதல் அமல்படுத்தப்பட உள்ளது. தொடக்கத்தில் அனைத்து ரெயில்களிலும் சீனியர் டிக்கெட் பரிசோதகர்கள் கேப்டன்களாக நியமிக்கப்பட உள்ளதாக ரெயில்வே உயர் அதிகாரிகள் நிராஜ் சாகே தெரிவித்தார்.

    டிக்கெட் பரிசோதகர்கள் தங்களது சீருடையில் கேப்டன் என்ற பேட்ஜ் அணிந்து இருப்பர். மேலும் அவரது பெயர் மற்றும் தொடர்பு கொள்ளும் செல் நம்பர் தகவல்களும் பயணிகளின் முன்பதிவு அட்டவணையில் இடம் பெற்று இருக்கும். மேலும் ரெயில் பெட்டியில் ஓடும் அறிவிப்பு பலகையில் இத்தகவல் இடம் பெறும். அதை படித்து பயணிகள் அறிந்து கொள்ள முடியும்.

    ஆனால் கேப்டன் பதவி தங்களுக்கு கூடுதல் பணிச்சுமை என டிக்கெட் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். தென்னக ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகர் பற்றாக் குறை உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக 1 அல்லது 2 ரெயில் பெட்டிகளில் மட்டுமே பரிசோதகர்கள் டிக்கெட்டை பரிசோதித்து வந்தனர்.

    தற்போது பற்றாக்குறை காரணமாக 4 முதல் 5 ரெயில் பெட்டிகளில் பரிசோதித்து வருகின்றனர். இது தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே கூடுதலாக நியமித்தால் மட்டுமே கேப்டன் பணியை திறம்பட செய்ய முடியும் என டிக்கெட் பரிசோதகர்கள் தெரிவித்தனர். #Train #traincaptain

    ×